கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

Menu

“வைகுண்ட ஏகாதசி… ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு!”

சென்னை: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும். அதில், மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா சிறப்பு மிக்கது. பகல்பத்து, ராபத்து இயற்பா என மொத்தம் 21 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் 20 நாட்களும் பெரிய பெருமாள் எனப்படும் மூலவர் ரெங்கநாதர் முத்தங்கியுடன் சேவை சாதிப்பார்.

இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 14-ந் தேதி தொடங்கியது. பகல்பத்து உற்சவத்தின்போது, தினமும் நம்பெருமாள் ஒவ்வொரு அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளுவார். இதேபோல் ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்வார்.

ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். இதற்காக இன்று அதிகாலை 3.30 மணிக்கு மூலஸ்தானத்தில் நம்பெருமாள் பாண்டியன் கொண்டைடை, கிளி மாலை, ரத்தின அங்கி அணிந்து புறப்பட்டு சந்தனு மண்டபம், ராஜமகேந்திரன் திருச்சுற்று, நாழிகேட்டான் வாயில், கொடி மரம், குலசேகரன் திருச்சுற்று, விரஜாநதி மண்டபம் வழியாக, அரையர்கள் நாலாயிர திவ்வியப் பிரபந்த பாடல்களைப் பாடி வர, பெருமாளை பின் தொடர்ந்து வேத பாடல்களைப் பாடியபடி சென்றனர்.

அதிகாலை 4.45 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசலில் நம்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதன் பின்னர் சொர்க்க வாசலைக் கடந்து திருமாமணி மண்டபம் எனும் ஆயிரங்கால் மண்டபத்தில் நம்பெருமாள் சேவை சாதித்தார்.

கொரொனா பரவல் காரணமாக, முதல்முறையாக பக்தர்கள் அனுமதியின்றி இன்று சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இந்நிலையில், காலை 8 மணிக்கு பிறகு, கோயில் இணையதள முன்பதிவின் மூலம் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இன்று மட்டும் ரூ 250 கட்டண தரிசனத்திற்கும், 3,500 இலவச தரிசனத்திற்கும் சொர்க்க வாசலை மட்டும் கடந்து செல்ல 10 ஆயிரம் பேர் என மொத்தம் 17,000 பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, மாடவீதியில் தங்க ரதத்தில் மலையப்ப சுவாமி வலம் வந்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி இன்று அதிகாலை மார்கழி மாத திருப்பாவை சேவையுடன் சுவாமி துயில் எழுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனை தொடர்ந்து வாராந்திர அபிஷேக, அர்ச்சனை நடைபெற்றது. அதிகாலை 4.30 மணியளவில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உள்ள சொர்க்கவாசல் எனும் பரமபதவாசலை கோயில் தலைமை அர்ச்சகர் மற்றும் ஜீயர்கள் முன்னிலையில் வேத மந்திரங்கள் முழங்க திறக்கப்பட்டது.

இதேபோல், சென்னையில் உள்ள திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அதன் வழியாக பார்த்தசாரதி பெருமாள் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார்.