கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

திருமணமான புது பெண்ணிடம் கேட்கக்கூடாத கேள்விகள்

திருமணத்திற்கு முன்பு மணப்பெண் வேலைக்கு சென்றிருப்பார். திருமணத்திற்கு பிறகும் வேலையை தொடர்வதற்கு விரும்புவார். அதற்கு கணவரும் ஒப்புக்கொண்டிருப்பார். சில உறவினர்களோ, தோழிகளோ, நீ ஏன் வேலைக்கு செல்ல வேண்டும்? இனிமேலாவது வீட்டில் நிம்மதியாக இருக்கலாமே? என்று ஆலோசனை கொடுப்பார்கள். அவரின் நலன் கருதி ஆலோசனை வழங்கினாலும் முடிவெடுக்கும் உரிமை சம்பந்தப்பட்ட பெண்ணுக்குத்தான் இருக்கிறது.
திருமணத்திற்கு பிறகு வேலைக்கு செல்வது புது இடத்தில் எதிர்கொள்ளும் தனிமையையும், மன இறுக்கத்தையும் போக்கும் என்று புதுப்பெண் கருதலாம். சம்பாதிக்கும் பணமும் குடும்ப தேவையை பூர்த்தி செய்யும் என்ற எண்ணம் கணவர்- மனைவி இருவருக்கும் இருக்கலாம். திருமணத்திற்கு பிறகு வேலைக்கு செல்வதா? வேண்டாமா? என்பது புதுமண தம்பதியர் சுயமாக எடுக்கும் முடிவு என்பதை மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இது போன்ற கேள்விகள் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு எரிச்சலை உண்டாக்கும். நன்றாக சமைக்க தெரியுமா? என்ற கேள்வி புதுப்பெண்ணை ரொம்பவே எரிச்சல்பட வைக்கும். என்னென்ன சமைக்க தெரியும்? கணவருக்கு உன் சமையல் பிடித்திருக்கிறதா? என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல விரும்பமாட்டார்கள். சமையல் என்பது பெண்களின் சுய விருப்பத்தை பொறுத்தது என்பதை மற்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். திருமணமாகி ஓரிரு மாதங்கள் கடந்த நிலையில் ஏதேனும் நல்ல செய்தி உண்டா? எப்போது குழந்தை பெற்றுக்கொள்ளப் போகிறாய்? என்பது போன்ற கேள்விகள் புதுப்பெண்ணை மன வேதனைக்குள்ளாக்கும். எப்போது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது கணவர்-மனைவியின் தனிப்பட்ட விருப்பம். அதில் மற்றவர்கள் மூக்கை நுழைப்பது அதிருப்தியையும், எரிச்சலையும் உண்டாகும். எந்த பெண்ணும் இது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல விரும்பமாட்டார். செக்ஸ் போலவே இதுவும் அவர்களின் தனிப்பட்ட விஷயம் என்பதை மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். சில பெண்கள் திருமணமான சில மாதங்களில் உடல் பருமனாகிவிடுவார்கள். சிலர் உடல் மெலிந்துபோய்விடுவார்கள். ஏன் இப்படி மெலிஞ்சுபோய்விட்டாய்? கணவருக்கும் உனக்கும் ஏதேனும் பிரச்சினையா? கணவரின் குடும்பத்தினர் நன்றாக பழகுகிறார்களா? என்பது போன்ற கேள்விகள் புதுப் பெண்களை எரிச்சல்படுத்தும். உடல் எடை குறைவது, கூடுவது என்பது உடல் சார்ந்த செயல்பாடு. அப்படியே கணவருடன் மனஸ்தாபம் இருந்தாலும் அது அவர்களின் தனிப்பட்ட பிரச்சினை. ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் இருவருக்கும் இடையே சச்சரவு ஏற்பட்டிருக்கலாம். சில நாட்களில் இயல்பு நிலைக்கு திரும்பிவிடலாம். தங்கள் குடும்ப விவகாரங்களில் மற்றவர்கள் தலையிடுவதை பெண்கள் விரும்பமாட்டார்கள்.
உன் குடும்பத்தில் யார் ஆதிக்கம் செலுத்துகிறார்? மாமியாரா? கணவரா? இல்லை வீட்டில் இருக்கும் மற்றவர்களா? என்பது போன்ற கேள்விகளும் புதுப்பெண்ணுக்கு பிடிக்காது. குடும்பத்தில் நடக்கும் விஷயங்களை அடுத்தவர் தெரிந்துகொள்ள விரும்புவது அவசியமில்லை என்றே கருதுவார்கள்.
கணவர் உன் மேல் அக்கறை காட்டுகிறாரா? நீ கேட்பதை வாங்கிக்கொடுக்கிறாரா? சந்தோஷமாக வைத்துக்கொள்கிறாரா? வெளி இடங்களுக்கு அழைத்து செல்கிறாரா? உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் கண்ணியமாக நடத்துகிறாரா? போன்ற கேள்விகளை புதுபெண்கள் ரசிக்கமாட்டார்கள். இதுபோன்ற கேள்விகளை அவர்களால் தாங்கிக்கொள்ளவும் முடியாது. எரிச்சலூட்டுவதாக அமையும். உன் தோழிகள், நண்பர்களிடம் பேசுவதற்கு கணவர் அனுமதிக்கிறாரா? திருமணத்திற்கு முந்தைய வாழ்க்கையை பற்றி சந்தேக கண்ணோட்டத்துடன் கேள்வி கேட்கிறாரா? போன்ற கேள்விகள் எரிச்சலை அதிகப்படுத்திவிடும். அவரின் நேர்மை, நடத்தையை பற்றி கேள்வி எழுப்புவதாக அமைந்துவிடும். ஒருபோதும் இதுபோன்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல விரும்பமாட்டார்கள். கணவருக்கும், உனக்கும் இடையே எப்போதாவது சச்சரவு ஏற்பட்டிருக்கிறதா? அவர் நல்லவர்தானா? என்பது போன்ற கேள்விகள் ரொம்பவே காயப்படுத்திவிடும். அதுவும் கேள்வி கேட்பவர் நெருங்கி பழகுபவராக இல்லாதபட்சத்தில் எரிச்சல் அடைந்துவிடுவார்கள். இதுபோன்ற கேள்விகளை புதுப்பெண்ணிடம் கேட்பதை அனைவரும் தவிர்க்க வேண்டும்.