கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

தமிழக முதல்வரின் தாயார் தவுசாயி அம்மாள் காலமானார்! – முதல்வர், அமைச்சர்கள் அஞ்சலி

சேலம்: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் தவுசாயி அம்மாள் சேலத்தில் காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் பழனிச்சாமி, அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்ட பின் சிலுவம்பாளையம் கிராமத்தில் உள்ள மயானத்தில் இன்று தகனம் செய்யப்பட்டது.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தாயார் தவுசாயி அம்மாள், உடல்நல குறைவு காரணமாக கடந்த இரண்டு நாட்களாக சேலம் தனியார் (லண்டன் ஆர்த்தோ) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு வயது 93. இவரது கணவர் கருப்பக்கவுண்டர். இவர்களுக்கு விஜயலட்சுமி (74) என்ற மகளும், கோவிந்தராஜன் (70), தமிழக முதல்வர் பழனிச்சாமி (67) என இரு மகன்களும் உள்ளனர். இந்நிலையில், மருத்துவர்களின் தீவிர சிகிச்சை பலனளிக்காமல் நள்ளிரவு 12 மணியளவில் தவுசாயி அம்மாள் உயிர் பிரிந்தது.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய சென்றிருந்த முதல்வர் பழனிச்சாமிக்கு அவரது தாயாரின் மறைவு செய்தி தெரிவிக்கப்பட்டது. அந்த செய்தியை கேட்ட முதல்வர் உடனடியாக தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு சாலை மார்க்கமாக சேலம் வந்து சேர்ந்தார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையம் கிராமத்தில் வைக்கப்பட்டிருந்த தனது தாயின் முகத்தை பார்த்து கண்ணீர் மல்க தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி அஞ்சலி செலுத்தினார்.

இதை தொடர்ந்து, முதலமைச்சர் பழனிச்சாமியின் தாயார் உடலுக்கு அமைச்சர்கள் செங்கோட்டையன், அன்பழகன், தங்கமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கருப்பண்ணன், சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன், ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன், கோவை ஐஜி பெரியய்யா, அரசியல் கட்சித் தலைவர்கள், கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

முதலமைச்சரின் தாயார் மறைவு செய்தி அறிந்த துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம், முதல்வரை உடனே தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதலும், இரங்கலும் தெரிவித்ததுடன் நேரில் அஞ்சலி செலுத்த சேலம் விரைந்தார். இதேபோல், தமிழக ஆளுநர், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர். பா.ஜ.க. தலைவர் முருகன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் முதல்வரின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் பழனிச்சாமியின் தாயார் தவுசாயி அம்மாள் உடல் அவரது வீட்டில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டம் சிலுவம்பாளையம் கிராமத்தில் உள்ள மயானத்தில் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு தகனம் செய்யப்பட்டது.