விவாகரத்துப் பெற்றுப் பிரிந்த அல்லது துணையை இழந்த கணவன் அல்லது மனைவி, தமது குழந்தைகளை வளர்ப்பது எளிதான காரியமல்ல. அதிலும் தனியாக பெண் குழந்தைகளை வளர்க்கும் தந்தைகளின் தவிப்புகளை தனிப் பட்டியலே போடலாம்.
அதிகம் விவாதிக்கப்படாத ஒற்றைப் பெற்றோரின் கஷ்டங்கள் ஒரு மவுன சோகமாகவே நீடித்து வருகின்றன.
தனியாக பெண் குழந்தையை வளர்ப்பதற்குத் தடுமாறும் தந்தையர், தாங்கள் அன்றாடம் சந்திக்கும் சங்கடங்கள் அதிகம் என்கின்றனர். குறிப்பாக, ஒரு பெண் குழந்தை, சிறுமி என்ற நிலையில் இருந்து பெண் என்ற நிலைக்கு மாறும் பருவம். அந்தப் பருவத்து விஷயங்களை அவர்களுடன் பேசுவதற்கும், அவர்களுடன் போதுமான நேரத்தைக் கழிப்பதற்கும் தாங்கள் தடுமாறுவதாக ஒற்றைப் பெற்றோராக உள்ள தந்தையர் கூறுகின்றனர்.
இதற்கு உதாரணம், மனைவியைப் பிரிந்து 14 ஆண்டுகாலமாக தனது மகள், மகனை தனியாக வளர்ந்துவரும் ஷியாம்குமார். கட்டிடக் கலை நிபுணரான இவர், எனது மகள் ஒன்பதாம் வகுப்பும், மகன் ஏழாம் வகுப்பு படிக்கின்றனர். அவர்கள் சிறுகுழந்தைகளாக இருந்தபோதே நானும் என் மனைவியும் விவாகரத்துப் பெற்றுப் பிரிந்துவிட்டோம். அதன்பிறகு குழந்தைகளை நான் மட்டும்தான் வளர்த்து வருகிறேன். எனது பெற்றோர் கொஞ்சம் உதவி செய்கின்றனர் என்கிறார்.
ஷியாம்குமார் சொந்தமாக ஒரு நிறுவனத்தை நடத்துவதால், அவரால் தனது குழந்தைகளுக்கு ஏற்ப பணி நேரத்தை மாற்றிக்கொள்ள முடிகிறது. நான் எப்போதுமே வீட்டுக்கு சீக்கிரமாகத் திரும்பி குழந்தைகளைக் கவனித்துக்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறேன் என்கிறார். ஆனாலும் அவருக்குப் பிரச்சினைகள் இல்லாமல் இல்லை.
அவர் மகள் பெரியவளாகி விட்டாள். ஆரம்பத்தில், மாதவிலக்கு போன்ற விஷயங்களை அவளிடம் பேசுவது கடினமாக இருந்தது. அந்த விஷயத்தில் எங்கம்மாவும், எனது சக பெண் ஊழியர்களும்தான் உதவினர். தற்போது நானும் இதுகுறித்து அவளிடம் படிப்படியாகப் பேச ஆரம்பித்துவிட்டேன்.
தற்போது இவர்களின் தந்தை – மகள் உறவு, உலகில் எந்த விஷயத்தைப் பற்றியும் பேசும் அளவுக்கு அழகாக மலர்ந்திருக்கிறது.
மகள் எந்த விஷயம் பற்றியும் என்னிடம் பேசுவதற்கும் தயங்கக்கூடாது என்று நான் நினைக்கிறேன். தற்போது மாதந்தோறும் நான்தான் அவளுக்கு சானிடரி நாப்கின் வாங்கிக் கொடுக்கிறேன். முதலில், நான் அதை வித்தியாசமாக நினைக்கக்கூடாது அல்லவா? என்கிறார் ஷியாம்.
மகளுக்காக சின்னச் சின்ன அழகுசாதனப் பொருட்களைக்கூட தேடித் தேடி வாங்குவதில் ஆனந்தப்படுகிறார், ஷியாம். மகளைப் பற்றிப் பேசும்போதே அவர் முகம் பூரிக்கிறது.
அவளை முதன்முதலில் சலூனுக்கு முடி வெட்ட கூட்டிப்போனது ஞாபகம் இருக்கிறது. அவள் ரொம்பச் சுட்டி. சலூன் இருக்கையில் அவளை அமரவைப்பதற்கே மிகவும் கஷ்டப்பட வேண்டியிருந்தது.
சரி, இனி நாம் அவளுக்கு வீட்டிலேயே முடிவெட்டி விடலாம் என்று முடிவெடுத்துவிட்டேன். யூடியூப் பார்த்துத்தான் முடிவெட்டக் கற்றுக்கொண்டேன். கொஞ்சம் கொஞ்சமாக, நன்றாகவே முடிவெட்ட ஆரம்பித்துவிட்டேன். மகளுக்கு எட்டு வயதாகும் வரை நான்தான் முடிவெட்டி விட்டேன் என்று பழைய நினைவுகளை மீட்டெடுக்கிறார், ஷியாம்.