கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

பிளஸ் 2 செய்முறைத் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

சென்னை: பிளஸ் 2 செய்முறை தேர்வு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணாக 1-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அவர்களுக்கு பொதுத் தேர்வு கண்டிப்பாக இருக்கும் என்று கூறப்பட்டு தேர்வு அட்டவணையும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு இந்த மாதம் 16 ஆம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. குறிப்பாக இயற்பியல், வேதியல், உயிரியல் செய்முறை தேர்வுகள் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் கொரோனா 2வது அலை பரவல் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், 12-ம் வகுப்பு தேர்வுகள் மே 3-ம் தேதி அறிவிக்கப்பட்டபடியே நடக்குமா என்ற கேள்வி மாணவர்கள் மட்டுமல்லாமல் பெற்றோர் மத்தியிலும் எழுந்துள்ளது. ஆனால், திட்டமிட்டபடி தேர்வை நடத்த தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இது சம்பந்தமாக பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமார் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் ப்ளஸ் 2 செய்முறை தேர்வை திட்டமிட்டபடி ஏப்ரல் 16 ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 23 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும், பொதுத் தேர்வு கொரோனா தொற்று பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடித்து திட்டமிட்டபடி நடத்தப்பட வேண்டும் என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி துறை செயலாளர் அறிவுரை வழங்கியுள்ளார்.

இந்நிலையில், பிளஸ் 2 செய்முறை தேர்வை பாதுகாப்பான முறையில் நடத்துவது தொடர்பாக தமிழக அரசு சார்பில் 23 வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதில், செய்முறை தேர்வு தொடங்குவதற்கு முன்பும், தேர்வு முடிந்ததற்கு பிறகும் அறையைக் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு முறையும் செய்முறை தேர்வு முடிந்ததும் ஆய்வக அறையில் உள்ள அனைத்து சாதனங்களையும் கிருமி நாசினியை கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.

தேர்வுக்கு வரும் மாணவர்களை சமூக இடைவெளி விட்டு அமரச் செய்ய வேண்டும். ஒவ்வொரு முறையும் தேர்வுக்கு எத்தனை மாணவர்களை பங்கேற்க செய்வது என்ற வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும்.

மாணவர்களுக்கு 4 சதுர மீட்டர் தூரத்துக்குள் தேவையான சாதனங்கள் வைக்கப்பட்டு இருக்க வேண்டும்.

தேவையான அளவிற்கு ஹேன்ட் சானிடைசர் வழங்கப்பட வேண்டும்.

ஹேன்ட் சானிடைசர் தீப்பற்றும் தன்மை கொண்டதாகும். எனவே தீப்பிடிக்க கூடிய பொருட்களுக்கு அருகில் சானிடைசரை வைக்கக்கூடாது. எரியக்கூடிய சாதனங்களை கவனமுடன் கையாள வேண்டும்.

ஹேன்ட் சானிடைசர் பயன்படுத்திய மாணவர்கள் எரிந்து கொண்டிருக்கும் எந்த சாதனத்தையும் உடனடியாக தொட வேண்டாம்.

செய்முறை கூடத்தில் உள்ள மாணவர்களுக்கும், ஊழியர்களுக்கும் கொரோனா விதிமுறைகளை முன்கூட்டியே சொல்லி இருக்க வேண்டும். முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். கண்டிப்பாக முகக்கவசம் அணிதல், கைகளை சுத்தப்படுத்துதல், சமூக இடைவெளிகளை பின்பற்றுதல் உள்ளிட்ட விதிமுறைகளை சொல்லிக் கொடுக்க வேண்டும்.

செய்முறை தேர்வு நடக்கும்போது கதவு, ஜன்னல்களை கண்டிப்பாக திறந்து வைத்திருக்க வேண்டும்.

உள்காற்றை வெளியே தள்ளும் ‘எக்சாஸ்ட்’ மின் விசிறியை ஓட விட்டிருக்க வேண்டும். உரிய காற்று வசதிகள் இருக்க வேண்டும்.

அனைத்து மாணவர்கள் ஊழியர்களை தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்ப பரிசோதனை செய்ய வேண்டும்.

தேர்வு நடக்கும்போது மாணவர்கள், ஊழியர்கள் முகக்கவசம் அணிவது கட்டாய விதிகள் ஆகும்.

மாணவர்கள் சொந்த சானிடைசர், தண்ணீர் பாட்டில்கள் ஆகியவற்றை கொண்டு வர அனுமதிக்கலாம்.

ஒவ்வொரு மாணவரும் தேர்வு தொடங்குவதற்கு முன்பும், தேர்வு முடிந்ததற்கு பிறகும் கண்டிப்பாக கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.

ஆய்வுக்கூடத்தில் உள்ள எந்த ஒரு பொருளையும், வினாத்தாளையும் தொடுவதற்கு முன்பு சானிடைசர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஏற்கனவே தேர்வு நடந்து கொண்டிருக்கும் நிலையில் ஒவ்வொரு பேட்ஜ் மாணவர்களும் காத்திருப்பதற்கு உரிய ஓய்வு அறைகளை ஏற்பாடு செய்து இருக்க வேண்டும்.

அந்த ஓய்வு அறைகளையும் ஒவ்வொரு பேட்ஜ் மாணவர்கள் வருவதற்கு முன்பு கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.

பாதுகாப்பான குடிநீர் தேர்வு மையத்திலும், ஓய்வு அறையிலும் வைத்து இருக்க வேண்டும்.

கழிவறைகளை சிறந்த முறையில் சுத்தம் செய்து இருக்க வேண்டும். போதிய தண்ணீர் வசதிகள் செய்து இருக்க வேண்டும்.

மாணவர்கள் யாருக்காவது கொரோனா பாதிப்பு இருந்தால் அவர்களுக்கு மறுபடியும் தேர்வு நடத்தப்படும். மாணவர்களுக்கு காய்ச்சல், சளி, ஜலதோ‌ஷம் இருந்தால் அவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள். அவர்களுக்கும் வேறு தேதியில் தேர்வு நடத்தப்படும். அதற்கான தேதியை முதன்மை கல்வி அதிகாரி அறிவிப்பார்.

நோய் பாதிப்பு மண்டலத்தில் பள்ளிகள் அமைந்து இருந்தால் அந்த மாணவர்களுக்கு வேறு ஒரு பள்ளியில் தேர்வு நடத்தப்படும். அதற்கான ஏற்பாடுகளை முதன்மை கல்வி அதிகாரி செய்து தருவார்.

வேதியியல் செய்முறைத் தேர்வில் பிப்பெட் (PIPETTE) உபகரணத்தை மாணவர்கள் பயன்படுத்தக்கூடாது. வாய்வழியாக ரசாயனங்களை உறிய இந்தக் கருவி பயன்படும் என்பதால் இதனை பயன்படுத்த வேண்டாம். அதற்கு பதிலாக ப்யூரெட் (BURETTE) பயன்படுத்தலாம்.

அதேபோல தாவரவியல் மற்றும் உயிரியல் பாட செய்முறைத்தேர்வில் மைக்ரோஸ்கோப் பயன்படுத்த கூடாது. மாணவர்கள் மைக்ரோஸ்கோப் லென்ஸ் அருகே கண்களை பதித்து செய்முறை தேர்வில் ஈடுபடுவார்கள் என்பதால் இதற்கு தடை விதிக்கப்படுகிறது. அதன்மூலம் நோய் பரவலை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

செய்முறை தேர்வு வழிமுறை வெளியானதால் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் பொதுத்தேர்வு நடக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.இந்த செய்முறைத் தேர்வினை தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 5 லட்சம் மாணவர்கள் எழுதுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.