சென்னை, மார்ச்.01
இன்று முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் 45 வயதுக்கு மேற்பட்ட நோய்வாய்ப்பட்டவர் களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மிகதீவிரமாக பரவிய கொரோனா மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியது. பின்னர் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகளுக்கு மத்தியில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.
இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவது மத்திய, மாநில அரசுகளுக்கு கலக்கத்தை கொடுத்துள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா, கேரளாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில், டெல்லியில் கடந்தவாரம் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் கொரோனா தடுப்பூசி குறித்து விவாதிக்கப்பட்டது. அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், 2ஆம் கட்ட தடுப்பூசி பணிகள் நாடு முழுவதும் மார்ச் 1ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
முதல் கட்டத்தில் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு ஊசி போடப்பட்ட நிலையில் 2ஆவது கட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் 45 வயதுக்கு மேற்பட்ட நோய்வாய்ப்பட்டவர் களுக்கும் ஊசி போடப்படும் என தெரிவித்தார்.
மேலும், தடுப்பூசி அரசு மருத்துவமனைகளில் இலவசமாக போடப்படும் என்றும் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்திருந்தார். அதன்படி நாளை முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் 45 வயதுக்கு மேற்பட்ட நோய்வாய்ப்பட்டவர் களுக்கும் ஊசி போடப்படும் என தெரிவித்தார்.
இதனிடையே தற்போது தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி விலையை ரூ.250ஆக நிர்ணயித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.