கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு… ரயில்கள் வழக்கம்போல் ஓடும்!

சென்னை: கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. அத்துடன் தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது.

தமிழகத்தில், கொரோனா தொற்று பரவலை தடுக்க, ஏப்ரல் 30ம் தேதி நள்ளிரவு வரை, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால், பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை, தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும், இன்று முதல், இரவு, 10 மணியிலிருந்து காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த இரவு நேர ஊரடங்கின் போது, தனியார் மற்றும் அரசு பஸ் போக்குவரத்து, ஆட்டோ, டாக்சி மற்றும் தனியார் வாகன உபயோகத்திற்கு அனுமதி இல்லை. மருத்துவம் போன்ற அவசர தேவைக்கு மட்டும் வாடகை ஆட்டோ, டாக்சி போன்றவை அனுமதிக்கப்படும். பெட்ரோல், டீசல் பங்க்குகள் தொடர்ந்து செயல்படும்.

அதேபோல, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது . அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் செல்ல, அனைத்து நாட்களிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து கடற்கரை பகுதிகளிலும், அனைத்து நாட்களிலும், பொது மக்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் இருந்து மற்ற நகரங்களுக்கு செல்பவர்களின் வசதிக்காக இரவு 10 மணிக்குள் சம்பந்தப்பட்ட இடத்தை சென்று சேரும் வகையில் அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளன என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தாலும், இரவு நேர ரயில் சேவை திட்டமிட்டப்படி நடைபெறும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், சென்னையை பொறுத்தவரை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து நாள்தோறும் 27 ரயில்களும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 45 ரயில்களும் இயக்கப்படுகின்றன. இந்த ரயில் சேவைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

சென்னையில் இருந்து வடமாநிலங்களுக்கு குறிப்பாக மேற்கு வங்கம், ஒடிசா, பீகார், ஜார்கண்ட் மாநிலங்களுக்கு இயக்கப்படும் பெரும்பாலான ரயில்களில் அனைத்து இருக்கைகளும் நிரம்பியே செல்கின்றன. காத்திருப்போர் பட்டியலில் அதிக பயணிகள் இருக்கும் சூழல் உருவானால் கூடுதல் பெட்டிகளை இணைப்பது, சிறப்பு ரயில்களை இயக்கப்படுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.