கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்…’ தமிழக முதல்வரானார் மு.க.ஸ்டாலின்!

சென்னை: தமிழகத்தின் முதல்வராக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை பதவி ஏற்றுக் கொண்டார். அவருடன் 33 அமைச்சர்களுக்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

தமிழக சட்டமன்றத்திற்கு சமீபத்தில் நடந்த பொதுத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து மு.க.ஸ்டாலினை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்து இருந்தார். கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பதவி ஏற்பு விழா ஆளுநர் மாளிகையில் எளிமையாக நடைபெறும், அனைவரும் வீட்டில் இருந்தபடியே பதவி ஏற்பு விழாவை காணுங்கள் என்று மு.க.ஸ்டாலின் கூறி இருந்தார்.

அதன்படி, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்ற எளிய விழாவில், தொடக்கமாக தேசிய கீதமும், பின்னர் தமிழ் தாய் வாழ்த்தும் ஒலிக்கப்பட்டது. அதன் பின்னர் மு.க.ஸ்டாலினுக்கும், 33 அமைச்சர்களுக்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஸ்டாலினுக்கு முதல்வராக பதவிபிரமாணம் செய்து வைத்தபோது, `முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்…!’ எனக் கூறி தமிழகத்தின் முதலமைச்சராக பதவி ஏற்று கொண்டார் மு.க.ஸ்டாலின். அப்போது, அரங்கில் கூடி இருந்தவர்கள் கைகளை தட்டி வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிகழ்வின்போது, ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் ஆனந்தத்தில் கண் கலங்கினர்.

இந்த விழாவில் தி.மு.க. எம்.எல்.ஏக்கள், தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள், அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு தூதரக அதிகாரிகள், நீதிபதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அ.தி.மு.க. சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், மக்கள் நீதி மய்யம் சார்பில் அக்கட்சியின் தலைவர் கமலஹாசன் கலந்து கொண்டனர்.