கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

”கட்சியைபோல் அண்ணா பல்கலைக்கழகத்தையும் அடகு வைக்கிறார்கள்!” – போட்டுத் தக்கும் உதயநிதி

சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரி, தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அண்ணா பல்கலைக்கழகத்தால் 5 ஆண்டுகளில் நிதி திரட்டிக்கொள்ள முடியும். மாநில அரசின் நிதிப் பங்கீடு இல்லாமலேயே பல்கலைக்கழகத்தால் சமாளிக்கவும் முடியும். அதனால் உயர் சிறப்பு அந்தஸ்தை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அளிக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

அந்தக் கடிதம் அவரால் தன்னிச்சையாக அனுப்பப்பட்டுள்ளது எனவும், இதனால், அண்ணா பல்கலைக்கழகத்தில் 69% இடஒதுக்கீடு பாதிக்கப்படும் எனவும், மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் பல்கலைக்கழகம் சென்றுவிடும் எனவும், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வந்தன.

இதனால், தன்னிச்சையாக கடிதம் எழுதிய சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, தமிழ்நாட்டில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள் முன்பாக இன்று தி.மு.க. இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவிந்திருந்தார்.

அதன்படி இன்று தமிழகம் முழுவதும் தி.மு.க. இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் முன்பு உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி, அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, ”அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அண்ணா பல்கலைக்கழகம் மாநில அரசின் கட்டுப்பாட்டிலேயே தொடர்ந்து செயல்பட வேண்டும் போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், “அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கிறார். இதுகுறித்து அமைச்சர் தெரியாது என்கிறார். இது அ.தி.மு.க. ஆட்சி போடும் இரட்டை வேடம். இந்த ஆட்சியின் அவலம் இது. அண்ணா பெயரிலான கட்சியைத்தான் பா.ஜ.க.விடம் அடகு வைத்தார்கள் என்றால் இப்போது அண்ணா பல்கலைக்கழகத்தையும் அடகு வைக்கின்றனர்.

மாணவர்கள் குழப்பமான நிலையில் இருக்கிறார்கள். அரியர் வைத்துள்ள மாணவர்களும் தேர்ச்சி என்பதில் குழப்பம் இன்னும் நிலவுகிறது. மாணவர்களை தமிழக அரசு குழப்ப நிலையிலேயே வைத்துள்ளது.

அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற போட்டியில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவும் இருப்பார் என்று நினைக்கின்றேன். ஏன் என்றால் அவரும் நிழல் முதல்வர்போல் தான் செயல்படுகிறார்” என்று கூறினார்.