கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

க/பெ. ரணசிங்கம்-உள்ளூர் பிரச்சனையில் உலக அரசியல் பேசும் படம் வங்கம்-கொரிய மொழிகளில் எடுக்கப்பட்டிந்தால் ‘ஆஸ்கர்’ நிச்சயம் (தினச்சூரியன்-திரை விமர்சனம்)

தமிழகத்தில் வறட்சிக்கு பெயர் போன ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் நடைபெறும் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் க/பெ. ரணசிங்கம். ராமநாதபுரம் மாவட்டத்தில் குறிப்பாக முதுகுளத்தூர் கடலாடி, கமுதி வட்டாரங்களில் நிலவிவரும் தண்ணீர் பிரச்சனைதான் படத்தின் முதல்கரு.
குடி தண்ணீருக்கு அந்த மக்கள் எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பதை விளக்கும் படத்தின் ஆரம்பமே அமர்களமாகயிருக்கிறது. தள்ளுவண்டியில் தண்ணீர் குடங்கள் அடுக்கிக்
கொண்டு உச்சிவெயில், நடுநிசி பாராமல் தண்ணீர் தேவைக்காக பெண்கள் தங்களின் உயிர், உடல், பொருள் மற்றும் மானத்தை பணையம் வைத்து ரிஸ்க்எடுக்கிறார்கள்.
இதில் அந்தப் பகுதியில் பிரபலமான பெயரான அரியநாச்சியாக வரும் கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் அந்த கதாபாத்திரத்தில் நன்றாக நடித்திருக்கிறார் என்பதைவிட வாழ்ந்திருக்கிறார் என்று கூறுவதே சரியாக இருக்கும்.
படம் ஆரம்பித்த 10வது நிமிடத்தில் துபாய்க்கு பணிக்குச் சென்ற கதாநாயகன் ரணசிங்கத்தின் (விஜய்சேதுபதி)மரணச் செய்தி அந்த கிராமத்தை எட்டுகிறது.அப்போதே படம் பார்க்க வந்தவர்கள் அனைவரையும் சீட்டின் நுனிக்கு உட்கார வைக்கிறது என்று கூற முடியாது ஏனென்றால் படம் வெளியானது ஓடிடி தளத்தில் .ஆனாலும் சின்னத்திரையில் எதோ விஜய்சேதுபதி நடித்த புதுப்படம் என்று ரிலாக்ஸாக பார்த்துக் கொண்டிருந்தவர்களை நிமிர்ந்து உட்கார வைக்கிறது.
காய்ந்த பூமி , கருவேலமுள் காடுகள், கருத்த நிறம்,பட்டமணல், பனைமர நிழல்&இவற்றுடன் வாழ்க்கை நடத்தும் அந்தப் பகுதியின் பிரதிநிதிகளாக அரியநாச்சி&ரணசிங்கம் எதார்த்தமான கிராம காதல் பின்னணியில் மனதை பறி கொடுக்க நேரிடுகிறது.
காதலை சொல்லும் காட்சிகளில் கூட அந்த பகுதியில் உள்ள தீர்க்கவே முடியாது என்று அரசியல் காரணங்களுக்காக சொல்லப்படும் மிக முக்கிய பிரச்சனைகளான தண்ணீர், வேலையின்மை போன்ற பிரச்சினைகளை முன்நிறுத்தி கதாநாயகன் ரணசிங்கம் குரல் கொடுப்பதும் அதற்கு அந்த பகுதி மக்கள் ஒட்டுமொத்தமாக அவர் பின்னால் அணிவகுக்கும்போது உரிமைக்கான போராட்டம் துவங்குகிறது.
“நம்மளோட உரிமை என்னன்னு தெரிஞ்சுட்டா அப்புறம் எதுக்கு பயம்,”
“ஆத்திரப்பட்டு அவசரப்பட்டுதுனாலதான் நம்ம சனம் முன்னேறாமல் கிடைக்குது.”
“கவர்மெண்ட் சொல்வது உண்மைனா, லட்சக்கணக்கான வழக்குகள் கவர்மெண்ட்டுக்கு எதிரா ஏன் கோர்ட்டுக்கு வருது?” போன்ற வசனங்கள் இயக்குனரின் சமூக அக்கறையை பளிச்சிடுகிறது.
படத்தின் இரண்டாவது கரு மரணமடைந்த ரணசிங்கத்தின் உடல் தாய்நாடான இந்தியா வருவதில் உள்ள சிக்கள்களை தொகுக்கிறது. நடிகை ஸ்ரீதேவி துபாயில் மரணமடைந்தபோது அவரது உடல் உடனடியாக இந்தியாவுக்கு வந்து சேர்வதும், ஆனால் ஒரு சாதாரண இந்திய குடிமகனான ரணசிங்கத்தின் உடல் 10 மாதங்களாகியும் வந்து சேர முடியாமல் போகிறது என்பதும் இந்திய சமூகத்தில் உள்ள உயர்வு தாழ்வு மனப்பான்மைக்கும் கார்ப்பரேட் கம்பெனிகளின் கைப் பாவைகளாக இருக்கும் உலகநாட்டு ஆட்சியாளர்களுக்கும் கிடைத்த சவுக்கடி.
ஒரு தனி மனுஷியாக பிரதமர் வரை போராடி தனது கணவரின் உடலை இந்தியா கொண்டு வருகிறார் அரியநாச்சி. பிரதமரின் தலையீட்டில் இந்தியா வந்த ரணசிங்கத்தின் பூதஉடலுக்கு இறுதி சடங்கு நடைபெறுகிறது. அப்போது தமிழ்&இந்து கலாச்சாரத்தின் முக்கிய நிகழ்வான “சீதேவி” வாங்கும் நிகழ்வில் கணவரின் கையில் தன் கையை வைத்து “சீதேவி” வாங்கும்போதுதான் கணவரின் கையில் அரியநாச்சி என்ற தன் பெயர் பச்சை(டாட்டு) இல்லாததைக் காண்கிறாள் கதாநாயகி.
அந்த அதிர்ச்சியில் அந்த இடத்தை விட்டு அகன்று பிணத்தை பெற்றுக்கொண்டதற்கான பேப்பரை வாங்கி விறு விறென்று கையெழுத்து போடும்போது மதுரையை எரித்த கண்ணகி நினைவுக்கு வருகிறாள். அதைத்தொடர்து அரியநாச்சி தனது கணவரின் போட்டோவை பார்த்து “ஏதோ ஒரு பிணத்தை அனுப்பி உங்ககணக்கை முடித்து விட்டீங்களேடா &&&&&&&&&(கெட்டவார்த்தை) பயல்களா? என்று கதறுவது உலக கேவளஅரசியல் விளையாட்டு பாதிப்பின் உச்சநிலை.
திரைப்படத்தை இயக்கியவர் விருமாண்டி என்ற ஒரு புதுமுகம் என்று கூறுகிறார்கள். படத்தின் திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகளை பார்த்தால் அவருக்கு இது முதல் படம் என்று கூற முடியாது. அந்த அளவுக்கு சின்ன சின்ன சம்பவங்கள் மற்றும் கதாபாத்திரங்களுக்கு கூட சிரத்தை எடுத்துள்ளார். அவருக்கு டபுள் சபாஷ்போடலாம். தமிழ் திரைவரலாறு விருமாண்டிக்காக சிலபக்கங்களை ஒதுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.
இந்த படம் வங்க மொழியிலோ, கொரிய மொழியிலோ எடுக்கப்பட்டிருந்தால் அஞ்சாறு ‘ஆஸ்கர்’ நிச்சயம்.
க/பெ. ரணசிங்கம் படம் அல்ல, ஒரு பாவப்பட்ட பகுதி மக்களின் வரலாறு!