சென்னை: தமிழகத்தில் மிக கனமழை தொடரும் என்றும், காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
புரெவி புயல் உருவாகி தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்த புயலின் திசை வடமாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களை நோக்கி திரும்பியது. மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதே இடத்தில் நிலவி வருகிறது. ராமநாதபுரம் அருகே 40 கி.மீ. தூரத்தில் ஒரே இடத்தில் 30 மணி நேரத்திற்கும் மேலாக இந்த புயல் நீடித்து வருகிறது.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், ”மன்னார் வளைகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது. அடுத்த 12 மணிநேரத்தில் இது வழுவிழந்து அதே பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நீடிக்க கூடும். இதனால் கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை முதல் அதிகனமழையும் பெய்யும்.
மேலும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கனமழை முதல் அதிகனமழையும் ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றார்.

நாளை ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கனமழை முதல் அதிகனமழையும் தேனி, புதுக்கோட்டை, திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழையும் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். மீனவர்கள் குமரிக்கடல், மன்னார்வளைகுடா, தென் தமிழக கரையோர பகுதிகளுக்கு அடுத்த 24 மணிநேரத்திற்கும் கேரள கடலோரப்பகுதி லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளுக்கு அடுத்த 2 நாட்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறது” என்றார்.