கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

கொரோனா மருந்துகளுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பதில் மனித தன்மையில்லை மத்திய அரசு மீது அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பாய்ச்சல்!

மதுரை, மே 30-
ஜிஎஸ்டி கட்டமைப்பையே மாற்றியமைக்க வேண்டும் என்று, தமிழக நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் கூட்டம் 3 மாதங்களுக்கு ஒருமுறை நடக்கும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் 8 மாதங்களுக்கு பிறகு நேற்று முன் தினம் நடைபெற்றது. டெல்லியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் காணொலி காட்சி மூலமாக கூட்டத்தை தொடங்கி வைத்தார். தமிழக அரசு சார்பில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முதன் முறையாக ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இந்த நிலையில், நேற்று மாலை சென்னை தலைமைச் யலகத்தில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஜிஎஸ்டி கவுன்சிலில், ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு ஓட்டுதான் என்று நிர்ணயம் செய்து இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஒரு எம்எல்ஏ என்று தேர்ந்தெடுக்கப்படுவது கிடையாது. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் பிரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் எம்எல்ஏக்கள் தேர்வு நடைபெறுகிறது. அதேபோலத்தான் மாநிலங்களின் மக்கள் தொகை அடிப்படையில் வாக்குகள் இருக்கவேண்டும், அல்லது உற்பத்தி திறமை அடிப்படையிலாவது வாக்குகளை வைக்க வேண்டும். அதை விடுத்து அனைத்து மாநிலங்களுக்கும் தலா ஒரு வாக்கு என்றால், இதன் அடிப்படையிலேயே பிழை இருக்கிறது. நம்மிடமிருந்து ஒரு ரூபாய் வரி வருவாயை மத்திய அரசு எடுத்துவிட்டு நமக்கு 25 பைசாவோ, 30 பைசாவோதான் வருகிறது. அதேநேரம், வட கிழக்கு மாநிலங்களுக்கு 90 பைசா, 95 பைசா அளவுக்கு போகிறது. நமது வரிப்பணம்தான் மத்திய அரசு மூலமாக அவர்களுக்கு போகிறது. பொதுமக்களுக்கு நலன் கிடைக்க கூடும் என்பதால் கொரோனா பொருட்களுக்கான வரியை விட்டுத்தர தமிழகம் உட்பட பெரிய மாநிலங்கள் தயாராக இருந்தோம். சிறு மாநிலங்களுக்கு அதிக பங்கு தொகை கிடைப்பதால் அவர்கள் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு ஓட்டுதான் இருப்பதால் நமது கோரிக்கைகளை நிறைவேற்ற முடியவில்லை.
சில மாதங்களுக்கு மட்டும் அல்லது சில வாரங்களுக்கு மட்டும் கொரோனா சார்ந்த, மக்கள் உயிர்காக்கும் பொருட்கள் எவை எல்லாம் உண்டோ அவற்றுக்கு மட்டும் வரிகளை ரத்து செய்யுங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளேன். கொரோனா சார்ந்த பொருட்கள், வாக்சின் போன்றவற்றுக்கு வரி இருக்க கூடாது. 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. அதை பூஜ்ஜியமாக்குவதால் பெரிய அளவுக்கு இழப்பு ஏற்படாது மக்களுக்கு நலம் கிடைக்கும் என்று வலியுறுத்தியுள்ளேன். இதுபற்றி அமைச்சர்கள் குழுவை ஏற்படுத்தி ஆய்வு செய்கிறோம் என்று மத்திய நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி கட்டமைப்பு நடுங்குகிற கட்டிடம் போல இருக்கிறது. வலுவான அடித்தளம் இல்லை. முழு பரிசீலனை இல்லாமல் அவசர அவசரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பேசுவது உடனே நடைமுறைக்கு வர முடியாது. நாடாளுமன்றத்தில் அது நிறைவேற வேண்டும். மாநில சட்டசபைகளில் அதேபோன்று சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். இத்தனை விஷயங்கள் இதில் அடங்கியுள்ளன. எனவே இப்போது இதை திருத்த வேண்டியது அவசியம்.

தமிழகத்துக்கு மத்திய அரசு தர வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகை 12 ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கிறது. சுமார் ஒரு லட்சம் கோடி கடன் வாங்கி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பிரித்து வழங்க உள்ளதாக கூறியது. ஆனால் இதற்கு பல மாநில நிதியமைச்சர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். ஏனென்றால் மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை அளவு, வாங்கும் கடன் அளவை விட மிக அதிகமாக இருக்கிறது என்பதை சுட்டிக் காட்டினோம். ஜிஎஸ்டி சிஸ்டம் சரியில்லை. எனவே பெட்ரோலிய பொருட்கள் உட்பட கூடுதலாக எந்த ஒன்றையும் இந்த வரம்புக்குள் கொண்டு வருவது சரி கிடையாது. கொரோனா மருந்து மற்றும் உபகரணங்களுக்கு வரியை ரத்து செய்வதால் எவ்வளவு நிதி இழப்பு ஏற்படும் என்று கேட்டபோது, மத்திய அரசின் புள்ளி விபரம் இல்லை. 500 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்படலாம் என்றுதான் நான் கருதுகிறேன். இதற்காக ஏன் இவ்வளவு யோசனை இல்லை என்பதுதான் புரியவில்லை. கொரோனா சிகிச்சை பொருட்கள் மீது வரி போடுவது மனுஷத்தனத்தை குறைக்கும் செயலாகாதா. இவ்வாறு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்