கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

மயக்கம் வருவதற்கான காரணமும்… அறிகுறியும்…

நாம் நன்றாக இருக்கும் போதே திடீரென்று கண்கள் இருட்டிக்கொண்டு வர, நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாத அளவுக்கு மூளை வேலை நிறுத்தம் செய்ய, தடாலடியாக கீழே சாய்ந்து விழும் உடல் சார்ந்த மயக்கத்தை யாரும் விரும்புவதில்லை. உடல் சார்ந்த மயக்கத்தில் குறு மயக்கம், நெடு மயக்கம் என இரு வகை உண்டு. பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், மக்கள் அதிகமாக நடமாடும் பொது இடங்களிலும், அலுவலகங்களிலும் திடீரென்று யாராவது மயக்கமடைந்து தரையில் விழுவதை பார்த்திருப்பீர்கள். குறிப்பாகப் பள்ளிகளில் காலை இறைவணக்கம் நிகழ்ச்சி நடைபெறும் போது மாணவர்கள், இவ்வாறு மயக்கமடைவது வழக்கம். இதை குறு மயக்கம் என்கிறோம்.
இதற்கு காரணம் மூளைக்கு ரத்தம் செல்ல தடை ஏற்படுவது தான். ஏதாவது ஒரு காரணத்தால் ரத்த ஓட்டம் சில நிமிடங்களுக்கு இடுப்புக்குக் கீழே நின்று விடுகிறது. மூளைக்குச் செல்லும் ரத்தம் குறைகிறது. இதனால் மயக்கம் ஏற்படுகிறது. மயங்கித் தரையில் விழுந்ததும் ரத்த ஓட்டம் சரியாகி விடுகிறது. இதனால் மயக்கமும் சரியாகிவிடுகிறது.
காலை உணவைச் சாப்பிடாமல் பள்ளிக்கு வருவது முதல் காரணம். இதனைப் பசி மயக்கம் என்று கூறுகிறோம். இரவு தூக்கம் தேவையான அளவுக்கு இல்லாதது அடுத்த காரணம். ஒரே இடத்தில் அதிக நேரம் நிற்பது மூன்றாவது காரணம். குறிப்பாக, வெயிலில் நீண்ட நேரம் நின்றால் மயக்கம் வரும். உடல் சோர்வு, இந்த மயக்கத்தை வரவழைக்கும். அளவுக்கு அதிகமாக விளையாடுவது, உடற்பயிற்சி செய்வது, ஓடுவது போன்றவற்றாலும் குறு மயக்கம் வரலாம். மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள, காற்றோட்டம் குறைந்த இடங்களில் அதிக நேரம் இருந்தாலும் இந்த மயக்கம் வருவதுண்டு.
மனக் கவலை, இழப்பு, சோகம், திகில், அதிர்ச்சி போன்ற உளவியல் காரணங்களால் வயதில் பெரியவர்களுக்கு குறு மயக்கம் ஏற்படுகிறது. இறப்பு, இழப்பு போன்ற அதிர்ச்சி தரும் செய்திகளை கேட்டதும் மயக் கம் வருவது, இதற்கு சரியான எடுத்துக்காட்டு. நீண்ட நேரம் அழும்போது ஏற்படும் குறு மயக்கமும் இதைச் சேர்ந்ததுதான். மரணம் அடைந்தவர் வீடுகளில் பெண்கள் மயக்கம் அடைவது, இதற்குப் பொருத்தமான ஓர் உதாரணம்.
நீண்ட நேரம் சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு சிறுநீர் கழித்து முடித்ததும் மயக்கம் வரும். கழுத்து எலும்பில் பிரச்சினை உள்ளவர்கள் தலையை ஒரு பக்கமாகச் சாய்க்கும் போது குறு மயக்கம் வரலாம். வாந்தி, வயிற்றுப்போக்கு காரணமாக உடலில் நீர்ச்சத்து குறைந்துவிடும்போதும், உயரமாக ஏறும் போதும் மயக்கம் வரலாம். வெயிலில் அதிகமாக அலைவது, கடுமையான உடல் வலி, ரத்தசோகை, சத்துக்குறைவு, உணவு ஒவ்வாமை ஆகிய காரணங்களாலும் குறு மயக்கம் வருவதுண்டு.
நின்ற மற்றும் உட்கார்ந்த நிலையிலோ இருக்கும் ஒருவர் திடீரென்று நினைவிழந்து, மயங்கி விழுவார். அடுத்த சில நிமிடங்களில் மயக்கம் தெளிந்து அவராகவே எழுந்து கொள்வார். மயக்கத்திலிருந்து விடுபட்டதும் சில நிமிடங்களுக்கு கைகால்களில் நடுக்கமும், தசைத்துடிப்பும் ஏற்படும். சிலருக்குக் குறு மயக்கம் ஏற்படுவதற்கு முன்பு படபடப்பு ஏற்படும். அடிக்கடி கொட்டாவி வருவது, ஊசி குத்துவது போன்ற உணர்வு, வியர்ப்பது, மூச்சு வாங்குவது, வாயைச் சுற்றி மதமதப்பு முதலிய அறிகுறிகள் தோன்றுவதுண்டு. இவை ஏற்பட்டவுடன் தரையில் அல்லது படுக்கையில் படுத்துவிட்டால் குறு மயக்கம் வராது.