சென்னை; முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதாவின் உருவ சிலைக்கு அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளான (இன்று), சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு காலை 10 மணிக்கு அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.

இதை தொடர்ந்து, தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா மாநில சட்டப்பேரவை பொதுத்தேர்தல்களில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்கள் பெறும் நிகழ்ச்சியை எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் தொடங்கி வைத்தனர். அப்போது எடப்பாடி தொகுதியில் போட்டியிட பழனிசாமியும், போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட பன்னீர் செல்வமும் விருப்ப மனுக்களை அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றம் சார்பில் அங்கு வைக்கப்பட்டிருந்த 73 கிலோ எடைக் கொண்ட கேக்கை அவர்கள் இருவரும் வெட்டி ஒருவருக்கு ஒருவர் கேக் ஊட்டி மகிழ்ந்தனர்.

அதன் பின்னர் இருவரும், சென்னை மெரினா காமராஜர் சாலையில் அமைந்துள்ள லேடி வெலிங்டன் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தனார்கள். அங்கிருந்து புறப்பட அவர்கள் இருவரும், சென்னை மெரினா கடற்கரையில் பீனிக்ஸ் பறவை வடிவத்தில் அழகிய கட்டமைப்புடன் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் ஜெயலலிதாவிடம் பள்ளி மாணவி ஒருவர் லேப்-டாப் பெறுவது போன்று உருவாக்கப்பட்டுள்ள மெழுகு சிலையுடன் கூடிய அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்காவையும் திறந்து வைத்தனர்.
இந்த அனைத்து நிகழ்ச்சிகளிலும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அ.தி.மு.க. நிவாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் பெரும் திரளாக வந்து கலந்து கொண்டனர்.