புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார். இதையடுத்து, புதுச்சேரியில் நடந்து வந்த நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது.
புதுச்சேரியில் 2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலி 15 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, ஆட்சியை பிடித்தது. அதன்பின்னர் ஆளும் காங்கிரஸ் கட்சியில் இருந்து அடுத்தடுத்து எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். ஏற்கனவே ஒரு எம்.எல்.ஏ. ஆளுங்கட்சியில் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அரசுக்கான ஆதரவு 14 ஆக குறைந்தது. அதேநேரம், எதிர்க்கட்சிகள் தங்களுக்கு நியமன எம்.எல்.ஏ.க்கள் ஆதரவையும் சேர்த்து 14 பேர் இருப்பதால், காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழந்து விட்டதாக கவர்னர் தமிழிசையை சந்தித்து கூறினர்.

இதை தொடர்ந்து கவர்னர், 22-ம் தேதி மாலை 5 மணிக்குள் சட்டப்பேரவையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வருக்கு, உத்தரவிட்டார். இதனிடையே காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான லட்சுமி நாராயணன், தி.மு.க. எம்.எல்.ஏ. வெங்கடேசன் இருவரும் நேற்று திடீரென தங்களது பதவியை அடுத்தடுத்து ராஜினாமா செய்து சபாநாயகர் வி.பி சிவக்கொழுந்திடம் கடிதம் கொடுத்தனர். இதை சபாநாயகர் ஏற்றுக் கொண்ட நிலையில், ஆளும் காங்கிரஸ் அரசுக்கான ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 12 ஆக குறைந்தது. இதனால் நாராயணசாமி அரசுக்கான நெருக்கடி மேலும் முற்றியது.
இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு முதல்வ்அர் நாராயணசாமி தலைமைல் புதுச்சேரி சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் கூடியது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். நியமன எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை தாக்கல் செய்து முதலமைச்சர் நாராயணசாமி பேசினார். அப்போது, புதுச்சேரியில் காங்கிரஸ் அரசுக்கு பெரும்பான்மை உள்ளது என்றும், ஆட்சியை கவிழ்க்க சதி செய்வதாகவும் கூறினார். முந்தைய ஆளுநர் கிரண்பேடி மூலம் அரசுக்கு தொல்லை கொடுக்கப்பட்டதாகவும், நெருக்கடியை கடந்தும் ஆட்சியை நிறைவு செய்ததாகவும் கூறினார்.

அவரது உரையைத் தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. சட்டப்பேரவையில் ஆளுங்கட்சிக்கு காங்கிரஸ்-9 (சபாநாயகர் உள்பட), தி.மு.க.-2, சுயேட்சை-1 என மொத்தம் 12 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருந்தது. எதிர்க்கட்சிகள் வரிசையில் என்.ஆர். காங்கிரஸ்-7, அ.தி.மு.க.-4, பா.ஜ.க. நியமன எம்.எல்.ஏ.க்கள்-3 என மொத்தம் 14 பேர் இடம் பெற்றிருந்தனர். இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததால் புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார்.
இதையடுத்து, உடனடியாக அவையைவிட்டு வெளியேறிய முதல்வர் நாராயணசாமி, ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். மேலும், தனது அமைச்சரவையும் ராஜினாமா செய்வதாக அவர் தெரிவித்தார்.
ராஜினாமா கடிதத்தை கவர்னரிடம் அளித்துவிட்டு வந்த நாராயணசாமி, செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, ”புதுச்சேரி அமைச்சரவையை ராஜினாமா செய்துள்ளோம். இனி முடிவு செய்ய வேண்டியது ஆளுநர்தான். நியமன எம்.எல்.ஏ.க்கள் மூலம் ஆட்சிக் கவிழ்ப்பு செய்த எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் தகுந்த தண்டனை அளிப்பார்கள்” என்றார்.