புதுடெல்லி: இந்தியா முழுவதும் 60 வயதைக் கடந்தவர்களுக்கு மார்ச் 1-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை 1,21,65,598 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதிலும் 14, 037 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு உள்ளனர். இதனால், கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் 1,07,26,702 ஆக உள்ளது.
இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதல் கட்டமாக நாடு முழுவதுமுள்ள அரசு மற்றும் தனியார் துறையில் பணியாற்றும் 3 கோடி முன்களப் பணியாளர்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேலும், இரண்டாவது கட்டமாக 60 வயதைக் கடந்தவர்களுக்கும், 45 வயதைக் கடந்த இணை நோய்கள் உள்ளவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
இந்த நிலையில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ”நாடு முழுவதும் மார்ச் 1ம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச கொரோனா தடுப்பூசி போடப்படும். மேலும், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு பெரிய நோய் ஏதேனும் இருந்தால் முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி போடப்படும்.
நாடு முழுவதும் 10,000 அரசு மருத்துவ மையங்களும், 20,000 தனியார் மருத்துவ மையங்களிலும் கொரோனா தடுப்பூசி போடப்படும். அரசு மையங்களில் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும். தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசிக்கு பணம் செலுத்த வேண்டும்.
மேலும், தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசிக்கு செலுத்த வேண்டிய கட்டணம் குறித்து உற்பத்தியாளர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகங்களிடம் ஆலோசனை செய்த பின்னர் ஓரிரு நாட்களுக்குள் விரிவான தகவல் தெரிவிக்கப்படும்” என்றார்.