சென்னை: சமையல் கேஸ் சிலிண்டரின் விலை மேலும் ரூ.25 உயந்த்தப்பட்டுள்ளது. ஒரே மாதத்தில் சிலிண்டரின் விலை ரூ.100 உயர்தப்பட்டுள்ளதால் செய்வதறியாது இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலையின் மதிப்பை அடிப்படையாக கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மட்டுமின்றி, சமையல் எரிவாயு சிலிண்டர் விலையையும் மாற்றி அமைத்து வருகின்றன. பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினசரி மாற்றியமைக்கப்படுகிறது. ஆனால் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை பொதுவாக மாதத்தில் முதல் மற்றும் பிற்பாதியில் மாற்றியமைக்கப்படும்.
பெட்ரோல், டீசல் விலை சமீபகாலமாக உயர்ந்தபடியே இருக்கிறது. சில மாநிலங்களில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.100-ஐ தாண்டிவிட்டது. அதேபோல் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையும் உயர்ந்து வருகிறது. அந்த வகையில் பிப்ரவரி மாதத்தில் 3வது முறையாக சமையல் எரிவாயு சிலண்டர் விலை உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் சமையல் கியாஸ் விலை கடந்த 4-ந்தேதி சிலிண்டருக்கு ரூ.25 உயர்ந்தது. அதன்பின் கடந்த 15-ந்தேதி ரூ.50 உயர்ந்து சிலிண்டர் ரூ.785-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த மாதத்தில் 3-வது முறையாக இன்று சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.25 உயர்த்தப்பட்டு ரூ.810-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில், ஒரே மாதத்தில் சிலிண்டருக்கு ரூ.100 உயர்ந்து இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக இல்லத்தரசிகள் தெரிவிக்கின்றனர்.