கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

”6 முதல் 10ம் வகுப்பு வரை கணிப்பொறி அறிவியல் பாடம், புதிய மருத்துவக் கல்லூரிகளுக்காக ரூ.2,470.93 கோடி!” – இடைக்கால பட்ஜெட்டில் துணை முதல்வர் பன்னீர் செல்வம் அறிவிப்பு

சென்னை: புதிய மருத்துவக் கல்லூரிகளுக்காக ரூ.2,470.93 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை கணிப்பொறி அறிவியல் (Computer science) பாடம் அறிமுகப்படுத்தப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டம், கடந்த 2-ம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து 3 நாட்கள் நடந்த கூட்டத் தொடரை தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. அ.தி.மு.க அரசின் பதவிக்காலம், வருகிற மே 24-ம் தேதியுடம் முடிவடைகிறது. அதற்கு முன்பாகவே பொதுத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி தங்களின் பிரசாரங்களைத் துவக்கிவிட்டன.

இந்நிலையில், 2021-22ம் ஆண்டுக்கான தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை இன்று (23.02.2021) காலை 11 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தில் துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசும்போது, ”நல் ஆளுமை குறியீட்டில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கொரோனா காலத்திலும் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முன்னணியில் உள்ளது. 2021-22ம் ஆண்டிற்கான வருவாய் பற்றாக்குறை ரூ.41,417.30 கோடியாக இருக்கும். மூலதன செலவினம் 14.41 சதவீதமாக உயர்ந்து ரூ.43,170.61 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசின் கடன் சுமை ரூ.5.7 லட்சம் கோடியாக அதிகரிக்கும்; தற்போது அரசின் கடன்சுமை ரூ.4.85 லட்சம் கோடியாக உள்ளது. 2021-22-ம் நிதி ஆண்டில் 84,686.85 கோடி ரூபாய் கடன் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது கடந்த ஆண்டைவிட நடப்பாண்டு நிதி பற்றாக்குறை அதிகரிப்பதை தவிர்க்க முடியாது.

சென்னை மாநகரை தனித்தன்மை வாய்ந்த நகரமாக மாற்றுவதற்கு 3,140 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2021-22-ல் நிதிப்பற்றாக்குறை மாநில ஜிடிபியில் 3.94%, ரூ.84,202.39 கோடியாக கட்டுப்படுத்தப்பட்டது. தமிழக மக்களின் போக்குவரத்து தேவைக்காக 2,000 மின்சார பேருந்துகள் உள்பட, 12,000 பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். கோவை மாவட்டத்தில் மெட்ரோ பணிகள் தொடங்க, 6,683 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, அதற்கான குழுவும் அமைக்கப்படும். நீதித் துறைக்கு ரூ.1,417 கோடி, உயர் கல்வித் துறைக்கு ரூ.5,478 கோடி, சுகாதாரத் துறைக்கு ரூ.19,420 கோடி, மின்சாரத் துறைக்கு ரூ.7,217 கோடி, காவல் துறைக்கு ரூ. 9,657 கோடி ஒதுக்கீடு, வேளாண்மைத் துறைக்கு ரூ.11,982 கோடி மற்றும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தை வலுப்படுத்த 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குடும்பத் தலைவர் விபத்தில் மரணமடைந்தால் காப்பீட்டுத் தொகையாக ரூ.4 லட்சம் வழங்கப்படும். பயிர்கடன் தள்ளுபடி திட்டத்திற்கு 5,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். அரசு பள்ளிகளில் இனி 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை கணிப்பொறி அறிவியல் (Computer science) பாடம் அறிமுகப்படுத்தப்படும். கொரோனா தடுப்பூசிக்கான மருத்துவச் செலவுகளை, மத்திய அரசாங்கம் தொடர்ந்து ஏற்கும் என எதிர்பார்க்கிறோம். தீயணைப்பு மீட்புத் துறைக்கு 4,436 கோடி ரூபாய், ஊரக வளர்ச்சித் துறைக்கு 22,218 கோடி ரூபாய் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக 6,88.48 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அம்மா விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. எல்.ஐ.சி மற்றும் யுனைடட் இந்தியா ஆகிய இரு காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, மக்களுக்குக்காக காப்பீடு திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும். இதற்கான தொகையை தமிழக அரசே ஏற்கும்.

தமிழக பேரிடர் காலங்களில் மாநில பொறுப்பு நிதியிலிருந்து 11,943.85 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. மத்திய அரசு வழங்கும் பேரிடர் நிதி எப்போதும் போதுமானதாக இருந்ததில்லை. தொடர்ந்து இந்த நிதியை அதிகரிக்க வலியுறுத்துவோம். ஹார்வர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தைப் போல, கனடாவில் உள்ள டொரன்டோ பல்கலைக்கழகத்திலும் தமிழ் இருக்கைக்கு உதவித்தொகை வழங்கப்படும். அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு ரூ.1,02,049 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஹார்வர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தைப் போல, கனடாவில் உள்ள டொரன்டோ பல்கலைக்கழகத்திலும் தமிழ் இருக்கைக்கு உதவித்தொகை வழங்கப்படும்.

சாலை பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதால் பெரும்பாலான விபத்துகள் குறைக்கப்பட்டுள்ளன. 2016-ல் 17,218-ஆக இருந்த சாலை விபத்துகள் 2020-ல் 8,123-ஆக குறைந்துள்ளன. தமிழ்நாடு சாலை பாதுகாப்பு இயக்கம் தோற்றுவிக்கப்பட்டு, அனைத்து துறைகளுடனும் இணைந்து செயல்பட்டு வருவதே இதற்கு காரணமாகும். மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக `RIGHTS’ என்கிற புதிய திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது விவசாயிகளின் பயிர் காப்பீட்டுத் திட்டத்துக்காக 1,738.31 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சத்துணவுத் திட்டத்திற்கு 2021-22ம் ஆண்டிற்கான இடைக்கால வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ரூ.1953.98 கோடி ஒதுக்கீடும், புதிதாக தொடங்கப்பட்ட மினி கிளினிக்குகளுக்கு ரூ.144 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அருட்பெருஞ்சோதி வள்ளலார், காரைக்கால் அம்மையார் பெயரில் விருதுகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. தமிழர்களின் முக்கிய விழாவான தைப்பூசம் பொதுவிடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2021-22ம் ஆண்டில் கைத்தறி, கைத்திறன் துணி நூல் மற்றும் கதர் துறைக்கு ரூ.1224.26 கோடி ரூபாயும், நீர்வள ஆதாரத் துறைக்கு 6,453 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இயற்கை பேரிடரின்போது 1 ஹெக்டேருக்கான நிவாரண தொகை ரூ13,000-ல் இருந்து ரூ20,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டு மேம்மாட்டு துறைக்கு 2021-22-ல் ரூ.229.37 கோடி ரூபாயும், அரசுப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்திற்காக 1,953 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக மாநில போக்குவரத்துக் கழகத்துக்கு 3,717.36 கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. நீர்வள ஆதாரத் துறைக்கு 6,453 கோடி ரூபாயும், மீன்வளத் துறைக்கு 580 கோடி ரூபாயும், பள்ளிக் கல்வித்துறைக்கு 34,181 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லுரிகள் கட்டுவதற்காக, 2,470.93 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் கூடுதலாக 1,650 மருத்துவ படிப்புக்கான இடங்கள் அதிகரிக்கும். புதிய மருத்துவக் கல்லூரிகளுக்காக 2,470.93 கோடி ரூபாய் ஒதுக்கீடு, மின்கட்டண மானியன்களுக்காக ரூ.8,834.68 கோடி ஒதுக்கீடு. நெல் ஜெயராமன் மையம் ரூ.47.87 லட்சம் செலவில் நீடாமங்கலத்தில் அமைக்கப்பட்டு வருகிறது தமிழ்நாட்டில் 15,900 ஹெக்டேர் அளவுக்கு மரங்களின் பரப்பளவு அதிகரித்துள்ளது. அரசு ஊழியர்களுக்கான ஒட்டுமொத்த மருத்துவ காப்பீடு தொகை ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும்’ என்றார்.

முன்னதாக, நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பே தங்களுக்கு பேச வாய்ப்பளிக்கும்படி தி.மு.க உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால், சபாநாயகர் தனபால் அதை நிராகரித்தார். இதனால் அவையில் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர், பட்ஜெட் கூட்டத்தைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.