சென்னை, மே.28&
தமிழகத்தில் 15 ஆயிரத்து 128 கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தாகின. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள், தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
ஜெர்மனி, பின்லாந்து, தைவான், பிரான்ஸ், தென் கொரியா, ஜப்பான், சீனா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள், தமிழகத்தில் தொழில் தொடங்குகின்றன. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தாகின.
இதில் 9 நிறுவனங்கள் நேரடியாகவும், 8 நிறுவனங்கள் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. தமிழகத்தில் மொத்தம் ரூ. 15,128 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தங்களில் இன்று கையெழுத்திடப்பட்டன.
இப்புதிய ஒப்பந்தங்கள் மூலம் 47 ஆயிரத்து 150 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் தொழில் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
