சிதம்பரம்: புரெவி புயல் காரணமாக பெய்து வரும் கனமழையால், சிதம்பரம் கோயிலுக்குள் மழை நீர் புகுந்து குளம்போல் காட்சியளித்தது.
புரெவிப் புயல் காரணமாக கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை போன்ற பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நேற்று முதல் கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புயல்காற்றோடு கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் கொள்ளிடம், சிதம்பரத்தில் அதிகபட்சமாக 34 செ.மீ மழை பெய்துள்ளது.

இந்த கனமழை காரணமாக, சிதம்பரம் நடராஜர் கோயிலின் உள்ளே அனைத்து சன்னதிகளிலும் மழை நீர் புகுந்தது. மழை நீர் புகுந்து குளம் போல் காட்சி தந்தது. சிவகங்கை தீர்த்தமும் நீர் நிரம்பிக் காணப்படுகிறது. கோயில் மழை நீர் மூன்றடிக்கும் மேல் நீர் நிற்கிறது. இக்கோயிலுக்குள் மழை நீர் தேங்காமல் இருக்க வடக்கு கோபுரம் அருகே பூமிக்கு அடியில் பெரிய அளவிலான வடிகாலை அக்கால அரசர்கள் அமைத்துள்ளனர்.

அனால், அந்த வடிகால் வாய்க்கால் எல்லாம் ஆக்கிரமிக்கப்பட்டோ, தூர்ந்துபோய்விட்டதாலோயே மழை நீர் வெளியே செல்ல வழி இல்லாமல் கோயிலுக்குள்ளேயே தேங்கி நிர்பதாக பக்தர்கள் வேதனை தெரிவித்தனர். மேலும், மழை நீர் கோயிலுக்குள் வெள்ளம் போல் சூழ்ந்திருந்தபோதும், இறைவனுக்கு செய்யப்படும் பூஜைகள் தடைப்படவில்லை என்று தீட்ஷிதர்கள் தெரிவித்தனர்.

இந்த தகவல் உடனடியாக நகராட்சி நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கோயிலுக்கு வந்த அதிகாரிகள், கோயிலுக்குள் தேங்கி நின்ற மழைநீரை இயந்திரங்ள் கொண்டு வெளியேற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர், இதேபோல் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் கோயிலுக்குள் மழை நீர் புகுந்ததாக கூறப்படுகிறது.