கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

கிரிஜா வைத்தியநாதன் நியமனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை!

சென்னை: தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணர் குழு உறுப்பினராக முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை ஆளுநர் நியமித்திருந்தார். வருகின்ற 19-ம் தேதி அவர் பதவியேற்க இருந்த நிலையில், அவரது நியமனத்திற்கு சென்னை உயர் நீதி மன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் காலியாக இருக்கும் நிபுணத்துவ உறுப்பினர் பணியிடங்களுக்கு தமிழகத்தின் தலைமைச் செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற கிரிஜா வைத்தியநாதன், வருவாய் நிர்வாக ஆணையராக பணியாற்றி ஓய்வுபெற்ற சத்யகோபால் மற்றும் குஜராத்தைச் சேர்ந்த இந்திய வனத்துறை அதிகாரி அருண்குமார் வர்மா ஆகிய மூவரை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதில் கிரிஜா வைத்தியநாதனுக்கு உரிய அனுபவம் இல்லாத காரணத்தினால் அவரது பணி நியமன உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அந்த மனுவில், ”தேசிய பசுமை தீர்ப்பாய சட்டத்தின் பிரிவு 5ன்படி நிபுணத்துவ உறுப்பினராக நியமனம் செய்யப்பட கூடிய நபருக்கு 15 ஆண்டுகள் இந்திய ஆட்சிப்பணி அனுபவமும், அதில் 5 ஆண்டுகள் சுற்றுச்சூழல் சார்ந்த துறையில் பணியாற்றிய அனுபவமும் இருக்க வேண்டும். ஆனால், கிரிஜா வைத்தியநாதனுக்கு 15 ஆண்டுகளுக்கு மேல் இந்திய ஆட்சிப்பணி அனுபவம் இருந்தாலும், சுற்றுச்சூழல் சார்ந்த பணிகளின் அனுபவம் 3 ஆண்டுகள் 6 மாதம் மட்டுமே உள்ளது என்பதால் இவரது நியமனம் தேசிய பசுமைத் தீர்ப்பாய விதிகளுக்கு எதிரானது, அதனால் அவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்” என்றும் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய பெஞ்ச் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கிரிஜா வைத்தியநாதன் சுற்றுச்சூழல் சார்ந்த பணிகளின் 3 ஆண்டுகள் 6 மாதம் மட்டுமே அனுபவம் பெற்றிருந்தாலும், தலைமை செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் போன்ற பதவிகளில் பெற்ற அனுபவதின் அடிப்படையில் அவருக்கு இந்த நியமனம் வழங்கியதாக மத்திய அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

ஆனால், மத்திய அரசின் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், கிரிஜா வைத்தியநாதன் சட்டப்படி தேவைப்படும் தகுதியை பெற்றிருக்கவில்லை என்று கூறி, கிரிஜா வைத்தியநாதன் தகுதி குறித்து அதிருப்தி வெளியிட்டார். மேலும் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணர் குழு உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமனத்திற்கு இடைக்கால தடை விதித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அத்துடன் இந்த வழக்கு விசாரணையை வரும் ஏப்ரல் 16-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.