சென்னை: திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு நடைபெறும் விழாவை, கொரோனா தடுப்பு விதிகளை முழுமையாக பின்பற்றி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது
பிரசித்திபெற்ற திருநள்ளாறு சனிபகவான் திருக்கோவிலில் வருகின்ற 27-ந் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது. இதற்காக தமிழகம், புதுச்சேரி மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சனிபகவானை தரிசனம் செய்ய வருவார்கள்.
டிசம்பர் 27-ந் தேதி முதல் பிப்ரவரி 12-ந் தேதி வரை திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி திருவிழாவை நடத்த காரைக்கால் மாவட்ட ஆட்சியரும், கோயில் செயல் அலுவலரும் முடிவு செய்திருந்தார்கள். அதே நேரம், கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால் கோயிலுக்குள் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், தீர்த்தங்களில் நீராட அனுமதி இல்லை என்றும் புதுச்சேரி இந்து அறநிலையத் துறை அறிவித்தது.
இந்நிலையில், சனிப்பெயர்ச்சி விழாவில் பக்தர்களை அனுமதிக்கக் கூடாது என்று நாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, காரைக்கால் மாவட்ட ஆட்சியரும் சனீஸ்வர பகவான் திருக்கோயில் தனி அதிகாரியுமான அர்ஜூன் சர்மா பதில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், ”சனிப்பெயர்ச்சி தினமான 27-ம் தேதி குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்களை அனுமதிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. நள, பிரம்ம தீர்த்தங்களில் நீராட பக்தர்களுக்கு தடை விதித்துள்ளோம். தனி மனித இடைவெளி பின்பற்றும் வகையில், வரிசை 3 கி.மீ. தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. நுழைவாயில்களில் கிருமிநாசினி பயன்படுத்துதல், கோயிலுக்குள் முகக்கவசம் அணிதலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 140 இடங்களில் பக்தர்களை கண்காணிக்க கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டிருந்தது.
இதனை ஏற்று பரிசீலித்த நீதிபதி, ”கொரோனா தடுப்பு நடைமுறைகள் அனைத்தும் செய்துள்ள போதிலும், தரிசனத்துக்காக ஒரு நாளைக்கு எத்தனை பேர் அனுமதிக்கப்படுவார்கள்? முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும், கொரோனா தடுப்பு விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
சனிப்பெயர்ச்சி திருவிழா நடத்துவது தொடர்பாக புதுச்சேரி இந்து சமய அறநிலையத் துறைச் செயலாளர், காரைக்கால் மாவட்ட கலெக்டர், கோவில் செயல் அலுவலர் மற்றும் புதுச்சேரி, துணைநிலை கவர்னர், மனுதார் மற்றும் தேவைப்படும் நபர்கள் அடங்கிய கூட்டத்தை கூட்டி முடிவெடுக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.
மேலும், கொரோனா தடுப்பு நடைமுறைகளை அனைத்து தரப்பினரும் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில், திருவிழாவை நடத்திக் கொள்ளலாம் என அனுமதி வழங்கி வழக்கை முடித்து வைத்தார்.